THIRUMANTHIRAM

Thursday, September 3, 2020

Sixth Thanthiram – 7. Aruludamaiyin Gnanamvaruthal

 Thirumanthiram of Thirumoolar


6ம் தந்திரம் - 07. அருளுடைமையின் ஞானம் வருதல்


திருச்சிற்றம்பலம்


பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.  1 
தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகந் திரிவார்
அவிழு மனமும்எம் ஆதியறிவுந்
தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே.  2 
புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத்
தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே.  3 
முன்னின் றருளு முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.  4 
சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே.  5 
புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.  6 
காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தே ரேறி யவனிவ னாமே.  7 
அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர்
அவ்வுல கத்தே யரனடி கூடுவர்
அவ்வுல கத்தே யருள்பெறு வாரே.  8 
கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ்
சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம்
எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே.  9 
நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல
வீடும் அளவும் விடுகின் றிலேனே.  10 


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...