Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம்
- 06. ஞான லிங்கம்(உணர்வுச் சிவம்)
திருச்சிற்றம்பலம்
உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும் குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும் தருவென நல்கும் சதாசிவன் தானே. 1
நாலான கீழது உருவம் நடுநிற்க மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண் நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால் பாலாம் இவையாம் பரசிவன் தானே. 2
தேவர் பிரானைத் திசைமுக நாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி யாவர் பிரானடி அண்ணலும் ஆமே. 3
வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற காண்டகை யானொடும் கன்னி உணரினும் மூண்டகை மாறினும் ஒன்றது வாமே. 4
ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் நீதியுள் மாதெய்வம் நின்மலன் எம்இறை பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. 5
சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே சுத்த சிவபதம் தோயாத தூவொளி அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம் ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே. 6
கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும் எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும் பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே. 7
எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம் சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே. 8
சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச் சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச் சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே. 9
சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமாகும் சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. 10
No comments:
Post a Comment