Thirumanthiram of Thirumoolar
7ம் தந்திரம் - 02. அண்டலிங்கம் (உலக சிவம்)
திருச்சிற்றம்பலம்
இலிங்கம தாவது யாரும் அறியார் இலிங்கம தாவது எண்டிசை எல்லாம் இலிங்கம் தாவது எண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்தது உலகே. 1
உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகில் எடுத்த சதாசிவன் தானே. 2
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம் ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் ஆகம அத்துவா ஆறும் சிவமே. 3
ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று ஆர்த்தனர் அண்டங் கடந்து அப் புறநின்று காத்தனன் என்னும் கருத்தறி யாரே. 4
ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி ஒண்சுட ரான இரவியோடு இந்திரன் கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள் தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே. 5
தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன் மாபரத் துண்மை வழிபடு வாரில்லை மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும் பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே. 6
தூவிய விமானமும் தூலமது ஆகுமால் ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம் ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. 7
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம் அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம் உய்த்ததின் சாதனம் பூமண லிங்கமே. 8
துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன் கன்றிய செம்பு கனல்இர தம்சலம் வன்திறல் செங்கல் வடிவுடை வில்லம்பொன் றென்றியங் கொன்றை தெளிசிவ லிங்கமே. 9
மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான் இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும் குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும் துறையடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே. 10
அது வுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி எதுஉண ராவகை நின்றனன் ஈசன் புதுஉணர் வான புவனங்கள் எட்டும் இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே. 11
அகலிட மாய்அறி யாமல் அடங்கும் உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே பகலிட மாம்முனம் பாவ வினாசன் புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே. 12
போது புனைசூழல் பூமிய தாவது மாது புனைமுடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும் ஆதியுற நின்றது அப்பரி சாமே. 13
தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சன சாலை வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை கரையற்ற நந்திக் கலையுந்திக் காமே. 14
No comments:
Post a Comment