THIRUMANTHIRAM

Monday, November 30, 2020

Eighth Thanthiram – 14. Arivuthayam

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 14. அறிவுதயம்

திருச்சிற்றம்பலம்


தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.  1 
அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்று
சங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்
பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே.  2 
அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென்று அருளால் அறிந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.  3 
அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே.  4 
ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
பாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.  5 
மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே.  6 
அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்
அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்
அறிவுஅறி வாக அணிமாதி சித்தி
அறிவுஅறி வாக அறிந்தனன் நந்தியே.  7 
அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்
அறிவுஅறி யாமை யாரும் அறியார்
அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்
அறிவுஅறி யாமை அழகிய வாறே.  8 
அறிவுஅறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.  9 
அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சு அருந்தவம் ஆவது
அறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.  10 
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.  11 
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின் றானே.  12 
மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.  13 
தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்
நாடுகின் றேன்நல மேஉடை யானடி
பாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.  14 
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தாள் 
மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.  15 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 13. Ninmala Avatthai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 13. நின்மல அவத்தை


திருச்சிற்றம்பலம்


ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே.  1 
காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்
மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.  2 
ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பது
தான்மா மறையறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே.  3 
உதயம் அழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே.  4 
எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே.  5 
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.  6 
ஆன மறையாதி யாம் உரு நந்திவந்து
ஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்
ஆன வகையை விடும்அடைத் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.  7 
சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்து
அத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே.  8 
வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.  9 
கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரை
நிறஞ்சேர் மத்தின் மலத்தினின் நின்ற
அறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்ந்து 
இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.  10 
தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாச பேதமும்
ஆன குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்படராவே.  11 
நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.  12 
ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாமே.  13 
ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாக மங்களும்
நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.  14 
முன்னை அறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.  15 
செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.  16 
தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.  17 
தொலையா அரனடி தோன்றும் அச்சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவும்
தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.  18 
தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே.  19 
அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.  20 
தான்அவ னாகிய ஞானத் தலைவனை
வானவ ராதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியை
ஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.  21 
ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்த மாமே.  22 
ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்
தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்து
ஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவாக் கியமாமே.  23 
அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே.  24 
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்
சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.  25 
தானே அறியான் அறிவிலோன் தானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்று
ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.  26 
தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவே
தத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.  27 
தன்னை அறிந்து சிவனுடன் தானாக
மன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.  28 
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்டு ஐங்கரு மத்துவித் தாதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே.  29 
உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்
உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச்செயல் அன்றி அவ்வுள்ளத்து ளானே.  30 
தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.  31 
இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமென்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.  32 
உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை யூட்டி யுடனுறலாலே
உயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.  33 
சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே.  34 
எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறையருள் தானே.  35 
திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.  36 
அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவனரு ளாமே.  37 
அருளான சத்தி அனல் வெம்மை போல
பொருள் அவனாகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்
திருவருளா னந்தி செம்பொருளாமே.  38 
ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்
பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே.  39 
பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் புணர்போதம் போதமும் நாதமும்
நாத முடன்நாத நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள்இச்சை யாமே.  40 
மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்
பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.  41 
ஆறாது அகன்று தனையறிந் தானவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.  42 
தீண்டற்கரிய அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.  43 
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.  44 
தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்
தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத்
தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.  45 
தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே.  46 
அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே.  47 
மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உள்கின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே.  48 
ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்
தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்
கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.  49 
குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்
குறிஅறி யார்கடங் கூடல் பெரிது
குறிஅறி யாவகை கூடுமின் கூடி
அறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே.  50 
ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்
தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பறி யாரே.  51 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 12. Kalavu Chelavu

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 12. கலவு செலவு


திருச்சிற்றம்பலம்


கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்
மேவும் செலவு விடவரு நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.  1 
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.  2 


திருச்சிற்றம்பலம்

Thursday, November 26, 2020

Eighth Thanthiram – 11. Pathinoram Thanamum Avatthaienak Kanal

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 11. பதினோராம் தானமும் அவத்தையெனக் காணல்


திருச்சிற்றம்பலம்


அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்
கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே.  1 
புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.  2 
காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.  3 


திருச்சிற்றம்பலம்

Wednesday, November 25, 2020

Eighth Thanthiram – 10. Andathi Petham

 Thirumanthiram of Thirumoolar


8ம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்


திருச்சிற்றம்பலம்


பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும் அண் டாசனத் தேவர் பிரானே.  1 
ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்
மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த் 
தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவை
ஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே.  2 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 09. Mukkuna Nirkkunam

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 09. முக்குண நிர்க்குணம்


திருச்சிற்றம்பலம்


சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்
வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்ப
ஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.  1 


திருச்சிற்றம்பலம்

Eighth Thanthiram – 08. Pravtthai

 Thirumanthiram of Thirumoolar

8ம் தந்திரம் - 08. பராவத்தை


திருச்சிற்றம்பலம்


அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்
நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.  1 
சத்தி பராபரம் சாந்தி தனிலான
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன்
சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே.  2 
ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே.  3 
அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சற நாடி நயம்செய்யு மாறே.  4 
உரிய நனாத்துரி யத்தில் இவனாம்
அரிய துரிய நனவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரனாம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே.  5 
பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் அதீதம் பயிலப் பயிலப்
பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார்
பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே.  6 
ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.  7 
துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே.  8 
நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.  9 
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.  10 
உன்னை அறியாது உடலைமுன் நான்என்றாய்
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.  11 
கருவரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே.  12 
அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆனகனவும்
அணுஅசை வில்பரா தீதம் சுழுத்தி
பணியில் பரதுரி யம்பர மாமே.  13 
பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே.  14 
பரமா நனவின்பின் பால்சக முண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவதுரி யத்தனும் ஆமே.  15 
சீவன் துரியம் முதலாகச் சீரான
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்து
ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.  16 
பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
பரம்சிவன் மேலாம் பரநனவாக
விரிந்த கனாவிடர் வீட்டும் சுழுனை
உரந்தகும் மாநந்தி யாம்உண்மை தானே.  17 
சார்வாம் பரசிவஞ் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே.  18 
கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்னை 
அலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்
குறிப்பது கோலம் அடலது வாமே.  19 
பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம்இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.  20 
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.  21 
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.  22 
ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.  23 
துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதி
விரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்
புரியப் பரையில் பராவத்தா போதம்
திரியப் பரமம் துரியம் தெரியவே.  24 
ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே.  25 
ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்
பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டு
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை உள்ளுறல் சுத்தமே.  26 
நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.  27 


திருச்சிற்றம்பலம்

Nineth Thanthiram – 10. Gnanothayam

  Thirumanthiram of Thirumoolar 9 ம் தந்திரம் - 10. ஞானோதயம் திருச்சிற்றம்பலம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதன...